ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த்,விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘லால் சலாம்’ திரைப்படம் வருகிற 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “நான் இசை வெளியீட்டு விழாவில் என்ன பேசுவேன் என்பது அப்பாவிற்கு தெரியாது. நான் பேசியது படத்தின் புரோமொஷனுக்காகவா என சிலர் அப்பாவிடம் விமான நிலையத்தில் வைத்து கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சின்ன விளக்கமளிக்க விரும்புகிறேன். என் மூலமாகவோ, படத்தில் அரசியல் பேசியோ, அவர் நம்பாத ஒரு விஷயத்தை நடித்தோ சூப்பர் ஸ்டார் படம் ஓட வேண்டிய அவசியம் இல்லை.
எந்த மாதிரியான ஒரு அரசியலும் பேசாத படம் ஜெயிலர். அது வெற்றி படமாக அமைந்தது உங்கள் அனைவருக்கும் தெரியும். என்னையும் சரி, என் சகோதரியையும் சரி, எங்களின் சொந்த கருத்துரிமையை ஊக்குவிக்கும் ஒருவர். அவரிடம் அப்படியொரு கேள்வி எழுப்பியது கஷ்டமாக இருந்தது” என்று கூறினார்.