X

அரசியல் கதைக்காக கமல் சமரசம் செய்து கொள்வது வருத்தம் – நடிகை கஸ்தூரி பதிவு

சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் “கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்” என்று பேசினார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

இது தொடர்பாக கமல் கூறியதாவது, “”ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர்” என்று கூறினார். இந்த கருத்துக்கு நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில், “கமல் ஒரு என்சைக்ளோபீடியா. அவர் தன் அறத்தையும், அறிவாற்றலையும் அரசியல் கதைக்காக சமரசம் செய்து கொள்வது வருத்தம். ஆதிமனிதன் தன்னை ஒருபோதும் மனிதன் என்று கூறி கொண்ட வரலாறு எதுவும் இல்லை. அந்த காலத்தில் ஹோமோ சேபியன்ஸ் என்ற பெயரே இல்லை. அதனால் அவன் மனிதனே இல்லை என்பது என்ன வாதம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.