அரசியலுக்கு வராத ஒருவரை பற்றி விமர்சனம் செய்வது சரியாக இருக்காது – கனிமொழி எம்.பி பேட்டி
‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை மேற்கொண்டு வரும் தி.மு.க. மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி., குன்னூருக்கு வந்தார். தொடர்ந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசும்போது, நீலகிரியில் என்ஜினீயரிங் கல்லூரி இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், அதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அரக்காட்டில் தேயிலை தோட்ட தொழிலாளர்களையும், காளான் உற்பத்தியாளர்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இதையடுத்து ஊட்டி சேரிங்கிராஸ் சந்திப்பில் கனிமொழி எம்.பி. பேசும்போது, ஊட்டியில் வீடுகள், கடைகள், கட்டிடங்களை முறைப்படுத்த முடியாமல் உள்ளது. காய்கறிகள், பழங்கள், தேயிலை உள்ளிட்டவைகளின் விலை பிரச்சினைகளால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தி.மு.க. ஆட்சி அமைந்ததும், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு வியாபாரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் விவசாயிகள், வியாபாரிகளிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-தமிழகத்தில் தி.மு.க. வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. கடந்த 10 ஆண்டு காலமாக படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற முடியாமல் உள்ளனர். விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை தீர்வு காணப்படாமல் உள்ளது. நீலகிரியில் பச்சை தேயிலைக்கு நல்ல விலை நிர்ணயம் செய்ய வேண்டும். பழங்குடியின மக்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும், அது வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றியை நிச்சயம் பாதிக்காது. அரசியலுக்கு வராத ஒருவரை பற்றி விமர்சனம் செய்வது சரியாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டிக்கு வந்த கனிமொழி எம்.பி.யை தோடர், கோத்தர், பனியர் ஆகிய பழங்குடியின பெண்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்றனர். பின்னர் அவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். முன்னதாக குன்னூரில் கனிமொழி எம்.பி. பேசிக்கொண்டு இருந்தபோது அம்மா மருந்தகம் அருகில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, எனவே பேச்சை சீக்கிரம் முடியுங்கள் என்று ஒருவர் கூச்சலிட்டார். உடனே தி.மு.க. தொண்டர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மதுக்கடை திறந்து இருக்கிறது அல்லவா?, அதனால் அப்படிதான் இருக்கும் என்று கனிமொழி எம்.பி., தி.மு.க. தொண்டர்களை சமாதானப்படுத்தினார்.