அரசியலில் நான் ஈடுபட மாட்டேன் – கவுதம் கார்த்திக்
இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கவுதம் கார்த்திக் – மஞ்சுமா மோகன் இணைந்து நடித்துள்ள ‘தேவராட்டம்‘ திரைப்படம் நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் வெளியாகிறது.
இந்த படத்தின் டிரைலர் பல்வேறு தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. நெல்லையில் உள்ள திரையரங்கு ஒன்றில்நேற்று மாலை காட்சியின் போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது.
அதனை ரசிகர்களுடன் சேர்ந்து பார்ப்பதற்காக கவுதம் கார்த்திக், மஞ்சுமா மோகன், இயக்குனர் முத்தையா ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு திரையரங்கம் சார்பில், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் ரசிகர்களுடன் அமர்ந்து தேவராட்டம் படத்தின் டிரைலரை கண்டு ரசித்தனர்.
பின்னர் நடிகர் கவுதம் கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:-
‘தேவராட்டம்‘ படம் கிராமிய சூழலில் உருவாக்கப்பட்டுள்ளது. குடும்பத்துடன் பார்க்கும்படியாக இருக்கும். இந்த படத்தில் நடித்தவர்கள் ஒரு குடும்பத்தினர் போல பழகினர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
செல்லப்பிள்ளை என்ற படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இதுபோல பல்வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனது தந்தை (கார்த்திக்) மிகப்பெரிய நடிகர். அவரைப் போல் என்னால் நடிக்க முடியாது. முடிந்த அளவுக்கு அவரைபோல் நடிக்க முயற்சி செய்வேன்.
எனது தந்தை அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் பிரசாரம் செய்தார். என்னை பொறுத்தவரை இப்போது அரசியலில் நுழையும் எண்ணம் இல்லை. நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இயக்குனர் முத்தையா கூறும்போது, “தேவராட்டம் எனது 5-வது படம். தமிழ் பண்பாடு, கலாசாரம், உறவு, மண்வாசனை ஆகியவற்றை மையமாக வைத்துதான் படம் எடுக்கிறேன். தமிழ் உறவுகள் நிலைத்து நிற்கவேண்டும். நமது உறவை பற்றி வருங்கால சந்ததியினர் தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற கருத்துகளை மையமாக வைத்துதான் படங்கள் எடுத்து வருகிறேன்.
எனது படத்தின் பெயர்கள் சர்ச்சையை ஏற்படுத்துவது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. கதையை மையமாக வைத்துதான் படத்தின் பெயரை சூட்டுகிறேன். என்றார்.