Tamilசெய்திகள்

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு! – நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சரிசமமாக பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது.

இதை எதிர்த்து அந்த அமைப்புகள் உள்ளிட்ட 14 பேர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து வந்தது.

விசாரணை நடந்து கொண்டு இருந்த போதே, இந்த விவகாரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காணும் யோசனையை முன்வைத்த அரசியல் சாசன அமர்வு, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோரை கொண்ட சமரச குழுவை அமைத்தது.

அந்த குழு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அந்த குழுவின் சமரச முயற்சி தோல்வியில் முடிந்தது. இதுபற்றிய தகவல் கடந்த ஆகஸ்டு மாதம் 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 6-ந் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை அரசியல் சாசன அமர்வு தினசரி விசாரித்து வந்தது. விசாரணையின் போது சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா தரப்பினர் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர். 40 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த விசாரணை கடந்த மாதம் 16-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

அரசியல் சாசன அமர்வுக்கு தலைமை வகிக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வு பெற இருப்பதால், அதற்கு முன்னதாக தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

இந்தநிலையில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று உத்தரபிரதேச மாநில தலைமைச் செயலாளர் ராஜேந்திர குமார் திவாரி, டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் ஆகியோரை தனது கோர்ட்டு அறைக்கு வரவழைத்தார். அவர்களுடன், உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர்களுடன் தலைமை நீதிபதி ஆலோசனை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் அரசியல் சாசன அமர்வு இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது. இதுபற்றிய அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

அயோத்தி மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்க இருப்பதை யொட்டி, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

குறிப்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

அயோத்தியில் மாநில போலீசாருடன் துணை ராணுவ படை வீரர்கள் 4 ஆயிரம் பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *