அயோத்தி சர்ச்சைக்குரிய நிலப்பிரச்சினை தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வெளியானதும் அதுதொடர்பாக வெற்றி ஊர்வலங்களோ அல்லது துக்க, மவுன ஊர்வலங்களோ நடத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு தடை உத்தரவுகளை உத்தரபிரதேச மாநில அரசு பிறப்பித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு விரைவில் தீர்ப்பு வழங்க உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வருகிற 17-ந் தேதி ஓய்வுபெறுவதால் அதற்கு முன்னர் தீர்ப்பை பிறப்பிக்க உள்ளார்.
இந்த தீர்ப்பு பிறப்பிக்கப்பட்ட பின்னர் அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக அந்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அயோத்தி மாவட்ட கலெக்டர் அனுஜ்குமார் ஜா இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த அக்டோபர் 12-ந் தேதி பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அவை டிசம்பர் 10-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் கூறியிருந்தார். இப்போது அந்த உத்தரவுகள் அனைத்தும் டிசம்பர் 28-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ மக்கள் ஒன்றுகூடுவது சமூக நல்லிணக்கத்துக்கு ஊறுவிளைவிக்கும் என்பதால் அவை தடை செய்யப்படுகிறது. அயோத்தி தீர்ப்புக்காக வெற்றி கொண்டாட்டங்களோ, ஊர்வலங்களோ அல்லது மவுன, துக்க ஊர்வலங்களோ நடத்தக்கூடாது.
ராமஜென்ம பூமி தொடர்பாக எந்த நிகழ்ச்சிகளோ, பொது விழாக்களோ, ஊர்வலங்களோ, சுவர் விளம்பரங் களோ செய்யக் கூடாது. தெருமுனை கூட்டங்கள், கலாசார நிகழ்ச்சிகள் ஆகியவைகளை நடத்தக்கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.