அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் ரெடி – பிரதமர் மோடி அறிவிப்பு
அயோத்தி ராமர் கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய இறுதி தீர்ப்பில் சர்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டிருந்தது.
முஸ்லிம்கள் மசூதி கட்டிக்கொள்வதற்காக தனியாக 5 ஏக்கர் நிலத்தை வழங்க வேண்டும் என்றும் அதே தீர்ப்பில் சொல்லி இருந்தனர்.
மேலும், ராமர் கோவில் கட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு 3 மாதத்திற்குள் உருவாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நிபந்தனை விதித்தது.
கோர்ட் விதித்த காலக்கெடு வரும் 9-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் அவர் பேசியதாவது:-
”அயோத்தியில் ராமர் கோவில் கட்ட திட்டம் தயாராக உள்ளது. இந்த பணிக்காக ‘ஸ்ரீராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா’ என்ற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி இந்த சிறப்புமிக்க முடிவை அறிவிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமாக உள்ளது.
கோர்ட்டின் வழிகாட்டுதலின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டப்பணிகளை மத்திய அமைச்சரவை விரிவாக தயார் செய்துள்ளது. அதேபோல் புதிதாக ஸ்ரீராம ஜென்ம பூமி திரத் ஷேத்ரா அறக்கட்டளைக்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது’’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.