அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியகத்தை கட்டமைப்பதற்கான திட்டத்தை டாடா சன்ஸ் கைப்பற்றி இருக்கிறது. இதற்கான ஒப்புதலை அம்மாநில சட்டசபை வழங்கியது. அயோத்தியில் கடந்த ஆண்டு முதல் இந்த திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.
மேலும், இது தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பிரதமர் மோடியிடம் திட்டம் பற்றிய விவரங்களை கடந்த ஆண்டு செப்டம்பரில் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், கோவில்களின் அருங்காட்சியக திட்டத்தை செயல்படுத்த டாடா சன்ஸ் குழுமத்திற்கு உத்திர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது. ரூ. 650 கோடியில் உருவாகும் இந்த திட்டத்திற்காக உத்திர பிரதேச அரசின் சுற்றுலா துறை சார்பில் டாடா சன்ஸ்-க்கு நிலம் வழங்கப்படுகிறது. 90 ஆண்டுகள் லீசுக்கு வழங்கப்படும் நிலத்திற்காக ரூ. 1 மட்டுமே வசூலிக்கப்பட இருக்கிறது.
அயோத்தியில் கோவில்களின் அருங்காட்சியக திட்டத்திற்காக டாடா சன்ஸ் தனது கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ. 650 கோடியை செலவு செய்ய இருக்கிறது. இந்த அருங்காட்சியகம் நாட்டில் உள்ள கோவில்களின் வரலாறு மற்றும் புகழ்பெற்ற கோவில்களின் கட்டமைப்பு திறன் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும்.
அருங்காட்சியகம் மட்டுமின்றி உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி திட்டம் ஒன்றும் டாடா சன்ஸ்-க்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மதிப்பு மட்டும் ரூ. 100 கோடி ஆகும். இதே போன்று லக்னோ, பிரயாக்ராஜ் மற்றும் கபில்வஸ்து ஆகிய இடங்களில் ஹெலிகாப்டர் சேவைகளை அறிமுகப்படுத்தவும் சட்டபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.