Tamilசினிமா

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த்

இமயமலைக்கு ஆன்மிக யாத்திரை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு பல்வேறு இடங்களை பார்வையிட்டு வருகிறார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேற்று முன்தினம் சந்தித்தார்.

இந்த நிலையில் உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை ரஜினிகாந்த் நேற்று சந்தித்து பேசினார். அதனைத்தொடர்ந்து அயோத்தி சென்ற ரஜினிகாந்த், அங்குள்ள அனுமன் கோவிலில் தரிசனம் செய்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதாவும் தரிசனம் செய்தார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘இந்த கோவிலுக்கு வர வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. இங்கு தரிசனம் செய்தது எனது அதிர்ஷ்டம்’ என்று கூறி சென்றார்.

பின்னர் ரஜினிகாந்த் அயோத்தியில் ராமர் கோவில் அமையவுள்ள இடத்துக்கு, தனது மனைவி லதாவுடன் சென்றார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள மதகுருமார்களை சந்தித்து ஆசி பெற்றார். மேலும் அங்கு ராமர் தரிசனமும் செய்தார்.