X

அயோக்யா- திரைப்பட விமர்சனம்

விஷால் நடிப்பில், அறிமுக இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ‘அயோக்யா’ எப்படி என்பதை பார்ப்போம்.

பெற்றோர் இல்லாத விஷால், சின்ன வயசுலயே சின்ன சின்ன திருட்டு வேலைகளில் ஈடுபட, அவரிடம் இருந்து போலீஸ் மாமூல் வாங்குவதால், போலீசாகிவிட்டால், யாரிடம் வேண்டுமானாலும் பணம் வாங்கலாம், எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் என்று நினைகிறார். உடனே போலீசாக வேண்டும் என்ற முடிவுக்கு வருவதோடு, அதற்கான பாதையில் பயணிப்பவர் எப்படியோ போலீஸ் இன்ஸ்பெக்டராகி விடுகிறார்.

திருடுவதற்காகவே போலீசான விஷால், எங்கயாவது கொலை நடந்தால் கூட அந்த பிணத்தை வைத்து எப்படி பணம் சம்பாதிக்கலாம் என்று யோசிக்கும் அளவுக்கு எந்த நேரமும் பணம், லஞ்சம் என்றே வாழ்ந்துக் கொண்டிருப்பவர், போதை மருந்து கடத்தல் தாதா பார்த்திபன் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் செய்யும் தவறுகளை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்.

இதற்கிடையே ராஷி கண்ணாவை பார்த்ததும் காதல் கொள்ளும் விஷால், தனது திருட்டுத்தன ரூட்டில் போய் அவரை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறார்.

இந்த நிலையில், பார்த்திபன் மற்றும் அவரது கும்பலால், பெண் ஒருவருக்கு ஆபத்து வர, அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்று ராஷி கண்ணா விஷாலிடம் கேட்கிறார். காதலிக்காக அந்த பெண்ணை பார்த்திபனிடம் இருந்து காப்பாற்றும் விஷால், அந்த பெண்ணின் தங்கைக்கு பார்த்திபனின் தம்பிகளால் நேர்ந்த கொடுமையை அறிந்துக் கொள்வதோடு, தனது அயோக்ய தனத்தை விட்டுவிட்டு, அதிரடி போலீசாக மாறி, பார்த்திபனின் தம்பிகளுக்கு சட்டப்படி, தண்டனை வாங்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். ஆனால், பார்த்திபனின் பண பலத்தால் விஷாலிடம் இருக்கும் ஆதாரம் காணாமல் போக, நீதிமன்றத்தில் ஒரு நாள் அவகாசம் கேட்கும் விஷால், குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் என்பதற்காக அதிரடி முடிவு எடுக்கிறார். அதன் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததா இல்லையா, விஷால் எடுத்த அந்த அதிரடி முடிவு என்ன, என்பது தான் க்ளைமாக்ஸ்.

வில்லனாக வரும் ஹீரோ, பிறகு மனம் திருந்தி நல்லவனாகி வில்லன்களை புரட்டி எடுத்து, மக்களுக்கு நல்லது செய்வது, ஏற்கனவே சில படங்களில் பார்த்தது தான் என்றாலும், இப்படத்தின் க்ளைமாக்ஸ் தான் படத்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதோடு, பாராட்டு பெறவும் செய்துவிடுகிறது.

விஷால், எப்போதும் போல ஆக்‌ஷனில் அதிரடி காட்டுபவர், நடிப்பில் கொஞ்சம் ஓவர் டோஸை காட்டியிருக்கிறார். வில்லன்களிடம் பஜ்ச் பேசுவதில் அசத்தும் விஷால், காதலியிடம் ரொமான்ஸ் செய்யும் போது மட்டும் சற்று தடுமாறுகிறார்.

அயோக்யனாக இருக்கும் விஷாலை நல்லவனாக மாற்றும் ராஷி கண்ணா, படத்தில் கொஞ்சமாக வந்தாலும், ரசிகர்களில் நெஞ்சில் நின்றுவிடுகிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பார்த்திபன் தனது நக்கல் பேச்சால் ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறார். விஷாலுடன் கட்டி புரண்டு சண்டை போடவில்லை என்றாலும், தனது வார்த்தை மூலமாகவே அவ்வபோது தாக்குகிறார். போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிகுமார், இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், ரொம்ப நல்லாவே பர்பாமன்ஸ் செய்திருக்கிறார்.

ஒரு சில காட்சிகள் வந்தாலும் யோகி பாபு சிரிக்க வைக்கிறார். அதுவும், விஷாலை ஐயா என்று கூப்பிடுமாறு போலீஸ் ஒருவர் சொல்ல, “சரத்குமார் கோச்சிக்குவாறு பரவாயில்லையா” என்று போடும் பிட்டுக்கு திரையரங்கமே அதிர்கிறது.

சாம் சி.எஸ் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் தான். ஒளிப்பதிவாளர் வி.ஐ.கார்த்திக் திரைக்கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறார்.

போலீஸ் இன்ஸ்பெக்டரான விஷாலுக்கு ஒரு காட்சியில் கூட காக்கி சட்டையை போடாத இயக்குநர், இதுதெலுங்கு படத்தின் ரீமேக் என்று சொல்லாமலேயே நமக்கு புரிய வைத்துவிடுகிறார்.

எத்தனை பேர் வந்தாலும் புரட்டி எடுப்பதோடு, பலமான ஆழுதங்களால் அடி வாங்கி, மண்ணில் புதைந்தாலும் எழுந்து வருவது, என்று ஆரம்பத்தில் இருந்தே மசாலாப் படமாக காட்சிகளை நகர்த்தி வரும் இயக்குநர் வெங்கட் மோகன், கிளைமாக்ஸின் போது காட்டிய வித்தியாசம் அத்தனை மாஸ் காட்சிகளையும், மசாலத்தனத்தையும் நம்மை மறக்க செய்துவிட்டு, படத்தை பாராட்ட செய்துவிடுகிறது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எந்த தண்டனை, எப்படி கொடுத்தால் குற்றவாளிகளுக்கு பயம் வரும் என்பதையும் இயக்குநர் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.

மொத்தத்தில், இந்த ‘அயோக்யா’ விஷால் ரசிகர்களுக்கு பிடித்த கமர்ஷியலான படமாக மட்டும் இன்றி பாடமாகவும் இருக்கிறது.

-ஜெ.சுகுமார்