Tamilவிளையாட்டு

அயர்லாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இலங்கை அபார வெற்றி

இலங்கையில் சுற்றுப்ப்யணம் மேற்கொண்டு விளையாடி வரும் அயர்லாந்து கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 16-ம் தேதி காலேவில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை கிரிக்கெட் அணியில் கேப்டன் கருணாரத்னே 179 ரன், குசல் மெண்டிஸ் 140 ரன், சண்டிமால் 102 ரன், சமரவிக்ரமா 104 ரன்கள் எடுத்தனர்.

இந்த நால்வரின் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி 131 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 591 ரன்கள் குவித்தது. இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து அணி முதல் இன்னிங்சில் 52.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

முதல் இன்னிங்சில் 143 ரன்கள் மட்டுமே எடுத்த அயரலாந்து அணி பாலோ ஆன் ஆனது. இதையடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய அயர்லாந்து முதல் இன்னிங்சை போல் இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணி 40 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. தொடர்ந்து பந்துவீச்சில் மிரட்டிய இலங்கை அணி மேற்கொண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி 168 ரன்னில் அயர்லாந்தை ஆல் அவுட் செய்தது.
இலங்கை தரப்பில் ரமேஷ் மெண்டிஸ் 4 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை முன்னிலையில் உள்ளது. அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 24-ம் தேதி காலேவில் தொடங்குகிறது.