X

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி – இந்தியா வெற்றி

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை.

இந்தியா, அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி டப்ளினில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்த நிலையில் மழை பெய்ததால், தாமதமாக தொடங்கிய ஆட்டம் 12 ஓவராக குறைக்கப்பட்டது.

முதலில் விளையாடிய அயர்லாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணி வீரர் ஹாரி டெக்டர் 33 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். பின்னர் 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் தீபக் ஹுடா 29 பந்துகளில் 47 ரன்களை எடுத்ததுடன், கடைசிவரை களத்தில் இருந்தார்.

மற்றொரு வீரர் இஷான் கிஷன் 26 ரன்களும், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 24 ரன்களும் அடித்தனர். 9.2 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்களை இழந்து 111 ரன்களை குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.