அம்மா உணவகங்களில் விற்பனை இலக்க நிர்ணயம் செய்ய முடிவு
சென்னையில் 401 அம்மா உணவகங்கள் மாநகராட்சி மூலம் தற்போது செயல்பட்டு வருகின்றன.
ஒரு சில அம்மா உணவகங்களில் தினமும் ரூ.300, ரூ.500 என்ற அளவில் விற்பனை நடைபெறுவதால் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பளத்திற்கே அவை போதுமானதாக இல்லை.
இதனை சரி செய்யும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அம்மா உணவகங்களில் சரிந்த விற்பனையை அதிகரிக்க விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. மண்டலம் வாரியாக கடைகளுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைகளில் நடைபெறும் 3 மாத விற்பனையின் அடிப்படையில் தினமும் குறிப்பிட்ட அளவுக்கு உணவு தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
அம்மா உணவங்களில் கடந்த 7 வருடமாக எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எடை போடும் எந்திரம், மாவு அரைக்கும் எந்திரங்கள் பழுதாகி உள்ளன. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து பழுது பார்க்கும் பணி நடக்கிறது. பயன்படுத்த தகுதி இல்லாத எந்திரங்களை மாற்றி புதியதாக வாங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு சிறு பழுதுகளை சீரமைத்து முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அம்மா உணவகங்களில் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதால் வரும் காலங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அம்மா உணவகங்களின் ஊழியர் சம்பளம், உணவு பொருட்கள் வாங்குவது போன்றவற்றிக்காக வருடத்திற்கு ரூ.120 கோடி செலவிடப்படுகிறது. 2013-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தால் ஏழை-எளிய கூலி தொழிலாளர்கள் அதிக அளவில் பயன்பெற்று வருகின்றனர்.