அம்மா உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான உணவு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அம்மா உணவங்கள் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் கைகொடுக்கின்றன. குறைந்த விலையில் உணவு வழங்குவதால், ஏராளமானோர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சென்னை சாந்தோம் மற்றும் கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவகங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். உணவின் தரம் மற்றும் ஊழியர்கள் சுகாதாரமான முறையில் உணவு சமைக்கிறார்களா என்பதை முதல்வர் ஆய்வு செய்தார். உணவை சாப்பிட்டு பார்த்த அவர், அங்கு சாப்பிட வந்திருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டு தெரிந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் நேற்று இரவு வரை 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் விவரம் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டோம். தாங்களாகவே முன் வந்து தகவல் அளித்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.
நோயின் தீவிரம் தெரியாமல் மக்கள் வெளியே நடமாடுகின்றனர். ஊரடங்கு உத்தரவு மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முடியும். ஒவ்வொருவரின் உயிரும் அரசுக்கு முக்கியம் என்பதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவகங்கள் இன்று கைகொடுத்துள்ளன. இங்கு மட்டும்தான் ஒரு ரூபாய்க்கு இட்லி தரப்படுகிறது.
இஎம்ஐ வசூல் என்பது மத்திய அரசின் விவகாரம் என்பதால், மத்திய நிதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.
ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா அறிகுறி இருந்தால் அக்கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் பரிசோதனைக்கு உட்படுத்துவோம். ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு நீட்டிப்பது பற்றி மத்திய அரசுதான் முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.