அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் – ஐஸ்வர்யா ராஜேஷ் உருக்கம்

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்த படம் கனா. இந்த படம் பல விருதுகளை குவித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விருது விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது, ‘கனா’ படத்துக்காக இதுவரை 15 விருதுகள் வரை வாங்கியிருப்பேன் என நினைக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்த இயக்குநர் அருண்ராஜா காமராஜ் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி.

எனக்கு கிரிக்கெட் விளையாடத் தெரியாது என்றாலும், நம்பிக்கை வைத்து பயிற்சியளித்து நடிக்க வைத்தனர். இந்த தருணத்தில் தனுஷ் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். ‘காக்கா முட்டை’ படத்துக்காக நீங்கள் நிறைய விருதுகள் வாங்குவீர்கள் என்று நம்பிக்கையூட்டினார். மேலும், என்னை பற்றி பெருமையாக நிறைய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களிடம் பேசினார்.

மேலும், நயன்தாரா மேடத்துக்கும் நன்றி. அவர்தான் இன்றைய நாயகிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம். நாயகியை மையப்படுத்திய படங்கள் வெறும் விமர்சன ரீதியில் வெற்றி என்ற நிலை இருந்தபோது, பணம் வசூல் பண்ணும் என்று நிரூபித்தார் நயன்தாரா. நாயகியை மையப்படுத்திய படங்களுக்கும் வியாபாரம் இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அவர்தான். சீனு ராமசாமி சார் கையால் விருது வாங்கியதை மறக்க முடியாது.

ஏனென்றால், ‘தர்மதுரை’ படத்தின்போது, “உனக்கு இந்திய முகம். நீ எந்த மொழியில் வேண்டுமானாலும் நடிக்கலாம். அப்படியொரு முக அமைப்பு உனக்கு இருக்கிறது என்று கூறினார். அப்பா, இரண்டு அண்ணன்களை இழந்துள்ளேன். ஆகையால் அம்மாவை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டுமே ஓடத் தொடங்கினேன். இப்போது என் வளர்ச்சியில் அவர் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார்” என்றார். தன்னை பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியபோது, இருக்கையில் இருந்தபடியே தன் நன்றியை தெரிவித்தார் நயன்தாரா.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools