அம்மாவிடம் ஆசி பெற்ற பிறகு வாக்களித்த பிரதமர் மோடி!
பாராளுமன்ற மூன்றாவது கட்ட தேர்தல் இன்று தொடங்கியது. கேரளா, கர்நாடகா, குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 116 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு மற்றும் அமித்ஷா போட்டியிடும் காந்தி நகர் தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடக்கிறது.
பொதுமக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து வருகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் நரேந்திர மோடி, வாக்களிப்பதற்காக இன்று தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு சென்றார். காந்தி நகரில் உள்ள தனது வீட்டிற்குச் சென்ற அவர், தன் தாயாரின் காலில் விழுந்து ஆசி பெற்றார். மேலும் தன்னை பார்ப்பதற்காக வீட்டின் வெளியே திரண்டிருந்த மக்களையும் மோடி சந்தித்து பேசினார்.
பின்னர் அங்கிருந்து ஜீப்பில் புறப்பட்ட பிரதமர் மோடி, அகமதாபாத்தின் ரானிப் பகுதியில் உள்ள நிஷான் உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கை பதிவு செய்தார். முன்னதாக வாக்குச்சாவடிக்கு வந்த மோடியை, காந்தி நகர் வேட்பாளர் அமித் ஷா வரவேற்று அழைத்துச் சென்றார்.