அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு – விடுதலை சிறுத்தைகள் கட்சியின் போராட்டம்

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன் பேட்டை கிராமம் உள்ளது. இங்கு பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அம்பேத்கர் சிலை உள்ளது. அங்கு நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் 4 பேர் கொண்ட கும்பல் வந்தனர். அக்கும்பல் திடீரென்று அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியது. அந்த குண்டு அம்பேத்கர் சிலை மீது பட்டு பழைய ஊராட்சி மன்ற கட்டிட வளாகத்தில் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, 4 பேர் கொண்ட கும்பலை பிடிக்க விரட்டினர்.

ஆனால் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இத்தகவல் அறிந்த ஊர் பொதுமக்கள் பெருமளவில் அந்த பகுதியில் திரண்டனர். குள்ளஞ்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் தொகுதி செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர் இளையராஜா, நகர செயலாளர் அம்பேத் மற்றும் நூற்றுக்கணக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் அந்த பகுதியில் மீண்டும் திரண்டனர். பெட்ரோல் குண்டு வீசியவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட துணை மேயர் தாமரைச்செல்வன் மற்றும் நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

இதனை தொடர்ந்து துணை மேயர் தாமரைச்செல்வன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு பால் ஊற்றி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அம்பேத்கர் சிலை மற்றும் பழைய ஊராட்சி மன்ற அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools