வங்கக்கடல் பகுதியில் உருவான அம்பன் புயல், சூப்பர் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று மேற்கு வங்காள கடற்பகுதியை நெருங்கியபோது அதி தீவிர புயலாக வலுவிழந்தது.
இன்று காலையில் ஒடிசாவின் பாரதீப் பகுதியில் இடருந்து 125 கிமீ தொலைவில், வடமேற்கு வங்கக்கடலில் புயல் மையம் கொண்டிருந்தது. புயல் மேலும் வலுவிழந்து இன்று மதியம் அல்லது மாலையில் மேற்கு வங்காளத்தின் சாகர் தீவுகள் மற்றும் வங்காளதேசத்தின் ஹதியா தீவுகள் இடையே கரை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. ஒடிசாவின் பாரதீப் பகுதியில் மணிக்கு 82 கிமீ வேகத்தில் சூறைக்காற்று வீசுகிறது. பாலசோர் மாவட்டம் சந்திபூர் கடலோர பகுதிகளிலும் கடும் சூறைக்காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். புயல் தாக்கும் பகுதிகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் முகாமிட்டுள்ளனர்.