X

அமைதிக்கான சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

ஜைனத் துறவியான ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர்ஜி மகாராஜ்( 1870-1954), எளிய வாழ்க்கையை வாழ்ந்து, பகவான் மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி அதனை மக்களுக்கு போதித்து வாழ்ந்தவர் ஆவார். மக்களின் நலனுக்காகவும், கல்வியைப் பரப்புவதற்காகவும், சமூக தீமைகளை எதிர்க்கும் வகையிலும் பல்வேறு கவிதைகள், கட்டுரைகள் மற்றும் பக்தி பாடல்களை படைத்தவர். மேலும் சுதேசி கொள்கையை வலியுறுத்தி, விடுதலைப் போராட்டத்திற்கும் தீவிர ஆதரவளித்தார்.

அவருடைய ஊக்குவிப்பால் கல்லூரிகள், பள்ளிகள், கல்வி மையங்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகின்றன.

அவரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் ராஜஸ்தான் மாநிலம், பாலியில் உள்ள ஜேத்புரா விஜய் வல்லப் சாதனா மையத்தில் ‘அமைதிக்கான சிலை’ என்ற பெயரில் சிலை நிறுவப்பட்டுள்ளது. 151 அங்குலம் உயரமுள்ள இந்த சிலை, 8 உலோகங்களைக் கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் செம்பு அதிக அளவில் இடம் பெற்றுள்ளது.

ஜெயினாச்சார்யா ஶ்ரீ விஜய் வல்லப் சுரீஷ்வர் ஜி மகாராஜின் 151-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேல் மற்றும் ஜைனாச்சார்யா விஜய் வல்லப் ஜி இருவரும் நாட்டிற்கு சேவை ஆற்றுவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர் என்றும், இரு தலைவர்களின் சிலைகளையும் (ஒற்றுமைக்கான சிலை மற்றும் அமைதிக்கான சிலை) திறப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது, தனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் குறிப்பிட்டார்.