திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக திருப்பதி எம்.எல்.ஏ பூமண கருணாகரன் ரெட்டி செய்யப்பட்டார். நேற்று திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பூமண கருணாகரன் ரெட்டி பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ரோஜா, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்பு விழாவில் குடும்பத்தினருடன் கலந்து கொண்ட அமைச்சர் ரோஜா சாமி தரிசனம் முடித்து கோவிலிலிருந்து வெளியே வந்தார். அப்போது வெளியே நின்று கொண்டு இருந்த 2 வயதான பெண்கள் அமைச்சர் ரோஜாவுக்கு பூ, வெற்றிலை பாக்கு, பழங்களை வழங்கினர்.
பின்னர் திடீரென அமைச்சர் ரோஜா காலில் விழுந்து அவரது கால்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து வணங்கினர். இந்த சம்பவத்தை கண்ட பக்தர்கள் சிலர் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். வயதில் மூத்த பெண்கள் இருவர் அமைச்சர் ரோஜா காலில் விழுந்து வணங்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று 57, 443 பேர் தரிசனம் செய்தனர். 28,198 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ. 3.90 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்றதால் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இலவச நேரடி தரிசனத்தில் வந்த பக்தர்கள் சுமார் 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.