வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.
மேலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கில் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. பொன்முடியும், அவரது மனைவியும் வருமானத்துக்கு அதிகமாக 64.90 சதவீதத்துக்கு சொத்து சேர்த்துள்ளனர். அதனால், அவர்களை விடுதலை செய்து சிறப்பு கோர்ட்டு பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்கிறேன். அவர்கள் இருவரையும் குற்றவாளிகள் என்று முடிவு செய்கிறேன். அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக வேண்டும். ஒருவேளை ஏதாவது இடையூறு இருந்தால், இருவரும் ஆன்லைன் வாயிலாக ஆஜராகலாம் என தெரிவித்தார்.
அதன்படி, இன்று தண்டனை விவரம் வழங்கவுள்ள நிலையில், சைதாப்பேட்டை இல்லத்தில் இருந்து அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவியும் நீதிமன்றத்தில் ஆஜராக புறப்பட்டனர். அப்போது அமைச்சர் பொன்முடி பயணித்த காரில் தேசியக்கொடி அகற்றப்பட்டது.
தீர்ப்பை வாசித்த நீதிபதி, அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், விசாலாட்சிக்கும், பொன்முடிக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.