அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் பேசிய ஆடியோ விவகாரம் – பா.ஜ.க குழு இன்று கவர்னரை சந்திக்கிறார்கள்
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் டெல்லி செய்தியாளர்களிடம் பேசியதாக கூறி 26 விநாடிகள் கொண்ட ஒரு ஆடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஆகியோர் இணைந்து ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்துள்ளனர்.
இந்த தொகையை அவர்களது முன்னோர்கள் கூட சம்பாதிக்கவில்லை. இவ்வளவு பெரிய தொகையை அவர்கள் இருவரும் எப்படி கையாளப் போகிறார்கள்? என்று உள்ளது. இந்த ஆடியோ வெளியானதை அடுத்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் ஆடியோவுக்கு மறுப்பு தெரிவித்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளத்தில் என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை. நான் அமைச்சரவையில் ஒதுக்கப்பட்டுள்ள இலாகாவில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்.
எனது பொது வாழ்வில் நான் செய்த அனைத்து விசயங்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்பேரில் மட்டுமே அமைந்துள்ளன. எங்களை பிரிப்பதற்காக எந்த ஒரு நாசவேலையை செய்தாலும் வெற்றி பெறாது. அந்த ஆடியோ முழுக்க முழுக்க போலியானது. அதற்கு தொழில்நுட்ப ரீதியாக என்னிடம் ஆதாரம் உள்ளது. 26 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் முதல் சில விநாடிகள் வேறொரு கிளிப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
எஞ்சிய உரையாடலில் குரல் தெளிவாக இல்லை. வேண்டும் என்றே சப்தம் குறைக்கப்பட்டுள்ளது. அதுவும் தவிர இந்த தொலைபேசி அழைப்பில் பின்னணி சத்தம் எதுவும் இடம்பெறவில்லை. எனவே நான் பேசியதாக வெளியான ஆடியோ போலியானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர் விரிவான விளக்கத்தை படங்களுடன் விளக்கி உள்ளார். அமைச்சரின் இந்த விளக்கத்தை பா.ஜனதா ஏற்கவில்லை. இதுதொடர் பாக தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மருமகன் சபரீசன் ஆகியோர் ஊழல் மூலம், ஒரே ஆண்டில், 30 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக சம்பாதித்ததாகப் பேசியிருந்த ஒலி நாடாவின் உண்மைத்தன்மையை, சுதந்திரமான, நியாயமான தடயவியல் தணிக்கை செய்யக்கோரி, தமிழக பா.ஜ.க. தலைவர்கள் குழு ஒன்று கவர்னர் ஆர்.என்.ரவியை இன்று சந்திக்கிறது.
பழனிவேல் தியாகராஜன், இந்த ஒலி நாடா பொய்யானது, யார் குரலில் வேண்டுமானாலும் இப்படிப் பேசி வெளியிட முடியும் என்று சமாளித்துக் கொண்டிருப்பதால், அவர் அந்த ஒலிநாடாவில் பேசிய அதே கருத்துக்களை நான் பேசுவதைப் போல ஒரு ஒலி நாடாவை வெளியிடுமாறு சவால் விடுகிறேன். என்னுடைய குரல் மாதிரியை ஆய்வுக்கு நான் வழங்க தயார். தமிழக நிதி அமைச்சரும் தனது குரல் மாதிரியை வழங்கவேண்டும். இரண்டு ஒலி மாதிரிகளையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடக்கும் விசாரணை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம். 2 ஒலி நாடாக்களின் உண்மைத் தன்மையை, நீதிமன்றம் விசாரித்துக் கூறட்டும்.
காலகாலமாக பதவிகளை எல்லாம் வாரிசுகள் அனுபவித்துக் கொண்டு, தனது கட்சித் தொண்டர்களை போஸ்டர் மட்டுமே ஒட்ட வைத்து ஏமாற்றுவது போல, இது அத்தனை எளிதானதல்ல என்பதை தமிழக நிதி அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் சொல்லும் விசித்திரக் கதைகளை, வேறு வழியில்லாமல் உங்கள் கட்சியினர் நம்பலாம். ஆனால் நீங்கள் என்ன கதை சொன்னாலும் நம்புவதற்கு, நம் தமிழக மக்கள் ஒன்றும் தி.மு.க.வினர் அல்ல. அவர்களின் புத்திசாலித்தனத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
பா.ஜனதா துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், வக்கீல் பிரிவு தலைவர் பால்கனகராஜ், ஆனந்த பிரியா, நாச்சியப்பன், சதீஷ் ஆகிய ஐவர் குழுவினர் இன்று மாலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என். ரவியை சந்தித்து உண்மையை கண்டுபிடிக்க வலியுறுத்தி மனு அளிக்கிறார்கள். அமைச்சரின் ஆடியோ விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.