அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை முடிவடைந்தது

போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு முறைகேடு விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 3 ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இருதய அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்று அதிகாலை அறுவை சிகிச்சை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. தொடர்ந்து சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை காலை 10.15 மணியளவில் நிறைவடைந்தது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை மேற்கொண்டது.

இதனைத்தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்படுகிறார். அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி மூன்று நாட்களுக்கு ஐசியூ-வில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என்றும், பிறகு 10 நாட்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆபரேசன் நடைபெற்று முடிந்த பின்னர் காவேரி மருத்துவமனை சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அறுவை சிகிச்சைக்குப்பின் செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது. புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டுள்ளது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்து 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news