Tamilசெய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர். கரூர் மற்றும் சென்னை வீடுகளில் நடந்த சோதனை நிறைவடைந்தது.

இன்று அதிகாலை சென்னை பசுமைவழிச்சாலை வீட்டிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக அழைத்துச் செல்வதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் எந்த வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் இதுவரை உறுதியான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், சட்ட வல்லுநர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வீட்டில் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் கைதுசெய்யப்பட்டுள்ளதை சட்ட ரீதியில் எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், இந்த பிரச்சினையை சட்டப்படி எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியானது.