அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி – அமலாக்கத்துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்தனர். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் நெஞ்சுவலி காரணமாக அரைசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் ஆழ்வார்பேட்டை காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி மேகலா தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பரத சக்ரவர்த்தி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும் நீதிபதி நிஷா பானு கைது நடவடிக்கை செல்லாது என்றும் தீர்ப்பளித்தார்.

இதைதொடர்ந்து 3-வது நீதிபதி கார்த்திகேயன் இந்த மனுவை விசாரித்தார். அவர் கைது நடவடிக்கை செல்லும் என்று தெரிவித்ததை தொடர்ந்து, செந்தில்பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

அமலாக்கத்துறை மற்றும் செந்தில் பாலாஜி தரப்பில் தங்களது தரப்பு விவாதங்களை எடுத்து வைத்தனர். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு இந்த மனு மீது இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது செல்லும் என்றும், வருகிற 12-ந்தேதி வரை அவரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இன்றே அமலாக்கத்துறையினர் காவலில் எடுக்க முடிவு செய்திருப்பதால் 5 நாட்கள் அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news