அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறையில் கூடுதல் வசதி அளிக்கப்படவில்லை – அமைச்சர் எஸ்.ரகுபதி விளக்கம்

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு சிறைவாசிக்கு எந்தளவு சலுகைகள் வழங்கப்படுமோ அது மட்டுமே அவருக்கு வழங்கப்படுகிறது. ஏசி வசதிகள் கிடையாது.

ஒரு வாரத்திற்கு ஒதுக்கப்படும் ரூ.1000த்தில் கேண்டீனில் உணவுகளை அவர் வாங்கி சாப்பிடலாம். மற்றப்படி வெளியிலிருந்து எந்த உணவும் உள்ளே செல்லாது. அவர் அமைச்சர் என்பதாலோ, தி.மு.க. பிரமுகர் என்பதாலோ கூடுதலாக சலுகை வழங்கப்படவில்லை.

வழக்கு உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் இருப்பதால் அவருக்கு இடையூறு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், ஊடகங்கள், பத்திரிக்கைகள் மூலம் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். மேலும் அவர் சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவது போல் மாயதோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். எக்காரணம் கொண்டும் முதல்வர் இதுபோன்ற செயலுக்கு துணை நிற்கமாட்டார்.

காவிரி பிரச்சினைக்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் பேசியுள்ளார். நீதிமன்றத்தில் அம்பேத்கர் படம் விவகாரத்தில் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை முதல்வரின் அறிவுரைபடி நேரில் சந்தித்து சட்டத்துறை அமைச்சர் என்ற முறையில் ஒரு மனுவை வழங்கினேன். அப்போது எந்த படத்தையும் எடுக்க சொல்லவில்லை என்று நீதிபதி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது என கூறி வருகிறார். ஆனால் நாங்கள் விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளோம். சிலர் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான லஞ்ச ஒழிப்பு புகாரில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் நீதிமன்ற உத்தரவுபடி யாரிடம் ஒப்படைக்க வேண்டுமோ அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2-ம் நபரிடம் ஒப்படைக்க முடியாது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news