X

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் – மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு அதிவேக இணைய சேவை வழங்கும் ரூ.1,815 கோடி மதிப்புள்ள “பாரத் நெட்” திட்ட டெண்டருக்கு அறப்போர் இயக்கம் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை முடியும்வரை, அந்த டெண்டரில் மேல் நடவடிக்கை ஏதும் எடுக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி, கொரோனா பேரிடர் காலத்திலும் அ.தி.மு.க. அரசின் டெண்டர்களில் தலைவிரித்தாடும் ஊழலுக்கு ஆணித்தரமான ஆதாரமாக அமைந்திருக்கிறது.

புகாரில் முகாந்திரம் இருக்கிறது என்று கருதி பைபர் ஆப்டிக் டெண்டருக்கு அ.தி.மு.க. ஆட்சியின் “கூட்டாளி” அரசான மத்திய அரசே தடை போட்டிருப்பதால், இப்போது தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் என்ன சொல்லப் போகிறார்?. மத்திய அரசின் நடவடிக்கையும் கற்பனையானது என்று கூறுவாரா? இல்லை, பைபர் ஆப்டிக் டெண்டர் விட்டிருக்கிறோம் என்பதே கற்பனையானது என்று கூறுவாரா?.

ஆகவே, “பாரத் நெட்” டெண்டர் மீதான விசாரணை பாரபட்சமின்றி நியாயமாக நடைபெறுவதற்கு, டான்பி நெட் நிர்வாக இயக்குனரை உடனடியாக வேறு துறைக்கு மாற்ற வேண்டும். “டெண்டர் விதிமுறை மீறல்கள் நடக்கவில்லை” என்று பொய்யும், புரட்டும் மிகுந்த அறிக்கைகளை வெளியிட்டு ஊழலை மறைத்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும், இந்த முறைகேடுகளுக்கு காரணமான அமைச்சர் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து மாநில லஞ்ச ஊழல் தடுப்புத் துறை விசாரணை மேற்கொண்டிட உத்தரவிட வேண்டும் எனவும் தமிழக கவர்னரை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: south news