காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியுடன், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் அவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில், அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரும், மத்திய மந்திரியுமான ஸ்மிரிதி இரானி, லக்னோ விமான நிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமேதியில் 15 ஆண்டுகளாக எம்.பி.யாக இருப்பவர், அங்குள்ள தனது ஆதரவாளர்களை கைவிட முடிவு செய்துள்ளார். வேறு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது மிகவும் துரதிருஷ்டவசமானது.
இது, அமேதியை அவமதிக்கும் செயல். அமேதி மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்து விட்டார். மக்கள் இதை சகித்துக் கொள்ள மாட்டார்கள்.
அமேதியில் ராகுல் காந்திக்கு ஆதரவு இல்லை என்பது அவருடைய ஆதரவாளர்களுக்கே தெரியும்.
வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தியின் தகுதி, திறமை குறித்து தெரிய வேண்டுமானால், அவர்கள் அமேதிக்கு வந்து பார்த்தால், தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஸ்மிரிதி இரானி கூறினார்.