அமேதி தொகுதி மக்கள் புதிய புரட்சி செய்துள்ளனர் – ஸ்மிரிதி இரானி

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் அமேதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு அவரை தோற்கடித்தார்.

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி அமேதி தொகுதியில் உள்ள பாரோலியா கிராமத்தில் சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட விவசாயி பிரதான் சுரேந்திரசிங் என்பவர் வீட்டுக்கு சென்றார். அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் ஸ்மிரிதி இரானி நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் அமேதி வாக்காளர்கள் பெயருக்காக பணியாற்றுபவருக்கு தக்க பாடம் புகட்டி, உண்மையிலேயே செயலாற்றுபவரை வெற்றிபெறச் செய்துள்ளனர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஒரு பெண் மிகப்பெரிய குடும்பத்தை சேர்ந்த ஒரு நபரை தோற்கடிப்பார் என்று யாராவது நினைத்துப் பார்த்தார்களா?

பா.ஜனதா கட்சிக்கு வாக்களித்து ஒரு புரட்சியை ஏற்படுத்தியதற்காக அமேதி மக்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ராகுல் காந்தி இந்த தொகுதி மக்களுக்கு எதுவுமே செய்தது இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

ஸ்மிரிதி இரானியுடன் கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் வந்திருந்தார்.

பின்னர் அந்த கிராமத்தில் இருந்து ஸ்மிரிதி இரானி திரும்பிச் சென்றபோது ஒரு பெண் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு செல்ல வாகனம் இல்லாமல் காத்திருந்தது தெரியவந்தது. உடனே அவர் பெருந்தன்மையுடன் தனது வாகனத்துடன் வந்த ஆம்புலன்சில் அந்த பெண்ணை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools