பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் ஆர்வலராக விளங்கியவர், பூர்வகுடியைச் சேர்ந்த பவுலோ பவுலினோ குவாஜாஜாரா. அங்கு காடுகளில் உள்ள மரங்களை வெட்டி கடத்துகிற கும்பல்களை எதிர்த்து போராடுகிற வன பாதுகாவலர்கள் அமைப்பின் உறுப்பினராக இருந்து வந்தார்.
இவர் அங்குள்ள மரான்ஹாவோ மாகாணத்தில், அராரிபோயா காட்டுப்பகுதியில் கடந்த 1-ந் தேதி வேட்டையாடிக்கொண்டிருந்தபோது, சட்ட விரோத மர கடத்தல் காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பவுலோவின் படுகொலை, அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரேசிலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமூகங்களுக்காக போராடி வருகிற லாப நோக்கற்ற சர்வைவல் இன்டர்நேஷனல் அமைப்பு, இதற்கு முன்பும் கூட அமேசான் காடுகள் ஆர்வலர்கள் 3 பேர் தங்கள் உறவினர்களுடன் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் டபாடிங்கா நகரில் பூர்வ குடிமக்களை பாதுகாப்பதற்காக பணியாற்றிய அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.
அமேசான் காடுகளின் பாதுகாவலர்கள் கொல்லப்பட்டு வருகிற சம்பவங்கள், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோவுக்கு எதிராக உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளன.
பவுலோ படுகொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகின்றனர். குற்றவாளிகளை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம் என்று பிரேசில் நீதித்துறை மந்திரி செர்கியோ மோரோ கூறி உள்ளார்.