கடந்த ஜுலை மாதம் வெளி வந்து அனைவரது கவனத்தையும் பெற்றிருந்த திரைப்படம் தோழர் வெங்கடேசன்.நாயகன் அரி சங்கர் , நாயகி மோனிகா சின்ன கோட்னா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இத்திரைப்படத்தை புதுமுக இயக்குனர் மகாசிவன் இயக்கி இருந்தார்.
வாழ்வில் என்ன கஷ்டப்பட்டாலும் முதலாளியாகத்தான் வாழ்வேன் என அடம்பிடிக்கும் இளைஞன் வெங்கடேசன். தன் கஷ்டங்களை சந்தோஷமாக்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறான். தன்னை வேண்டாம் என்ற பெண்ணுக்கே அடைக்கலம் தரும் சூழல் உருவாக, அவளுடன் காதலில் விழுகிறான். வாழ்வு வசந்தமாக மாறும் சூழலில் அரசுப் பேருந்தின் விபத்தில் சிக்க, அரசுடன் இழப்பீட்டுக்காக போராடுகிறான். அரசுக்கும் அவனுக்கும் நடக்கும் போராட்டத்தில் என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.
தமிழில் வெகு சில படங்களே எளிய மக்களின் வாழ்வினை நெருக்கமாக காட்ட முயலும். இப்படம் அப்படியான ஒரு சினிமா. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவானதாலோ என்னவோ படம் பார்த்தவர்களின் மனங்களை எளிதில் தொட்டுவிட்டது.வெங்கடேசன் நம் தெருவில்,நம் வீட்டின் அருகில் பார்க்குமொரு இளைஞனாக இருந்ததுதான் இப்படத்தின் பலம்.
தோழர் வெங்கடேசன் படத்தை மீடியாக்கள் கொண்டாடியது. சினிமா விமர்சகர்கள் பாராட்டு மழையில் நனைய வைத்தார்கள்.ஆனாலும் சொல்லும்படி மக்களிடம் போய் சேரவில்லை என வருத்தப்பட்டார்கள் படக்குழுவினர்.
தற்போது அமேசான் பிரைம் வீடியோவில் தோழர் வெங்கடேசன் படம் ஒளிப்பரப்பட்டு வருகிறது. படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்கிறார் படத்தின் நாயகன் அரி சங்கர். இப்படத்தின் ஒரு பாடலை பேஸ்புக் வழியாக ஒன்றரை கோடி பேர் பார்த்துள்ளார்கள் என்கிறார் அரிசங்கர்.