X

அமெரிக்க விமானத்தில் ஆப்கானிஸ்தான் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளனர். முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய நிலையில் அவர்கள் ஆட்சி அமைக்க மும்முரம் காட்டி வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

குறிப்பாக, காபூல் விமான நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கூட்டத்தை சமாளிக்க முடியாமல் அமெரிக்காவும்  பிற நாடுகளும் திணறி வருகின்றன.

இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து நேற்று புறப்பட்ட அமெரிக்காவின் சி-17 விமானத்தில் ஆப்கன் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவரும் சென்றுள்ளார். திடீரென நடுவானிலேயே அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இதையறிந்த விமானி காற்றழுத்தத்தை சீராக்க விமானத்தை தாழ்வாக பறக்கச் செய்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அப்பெண்ணிற்கு டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாக அந்த விமானம் ஜெர்மனியில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரை இறங்கியதும் தாயையும், சேயையும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.