அமெரிக்க ராணுவத்தை வெளியேற்றினால் பொருளாதார தடை விதிப்போம் – ஈராக்கிற்கு அமெரிக்கா எச்சரிக்கை

ஈரான் நாட்டின் அரசுக்கு உதவும் வகையில் அங்கு துணை ராணுவப் படை போன்று ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

அந்த அமைப்புக்கு தலைவராக சுலைமானி என்பவர் இருந்தார். ஈரான் அரசுக்கு தேவையான உளவு தகவல்களை இவரது அமைப்பு அளித்து வந்தது. அதோடு சர்வதேச அளவில் ஈரானுக்கு ஆதரவான செயல்பாடுகளிலும் அந்த அமைப்பு இயங்கி வந்தது.

சுலைமானியின் நடவடிக்கைகளை கண்காணித்த அமெரிக்கா அவரால் அமெரிக்க ராணுவத்துக்கும், அமெரிக்க மக்களுக்கும் ஆபத்து இருப்பதாக கருதியது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்த சுலைமானி மீது ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் அதிபர் அமெரிக்கா மீது பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரித்தார். இதற்கு டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

புளோரிடா மாகாணத்தில் இருந்து நேற்று வாஷிங்டன் திரும்பிய அமெரிக்க அதிபர் டிரம்ப் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அமெரிக்கா மீதோ அல்லது அமெரிக்கர்கள் மீதோ ஈரான் தாக்குதல் நடத்தினால் நாங்கள் விரைவாகவும், பயங்கரமாகவும் பதிலடி கொடுப்போம். ஈரானில் உள்ள 52 இடங்களை நாங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளோம். எனவே ஈரான் இனி எச்சரிக்கை விடுத்தாலே நாங்கள் அடுத்த கட்ட தாக்குதலை தொடங்குவோம்.

நாங்கள் நடத்தும் தாக்குதல் இதுவரை இல்லாத அளவுக்கு பயங்கரமான தாக்குதலாக இருக்கும். புதிய தளவாடங்களை நாங்கள் தாக்குதலுக்கு பயன்படுத்த நேரிடும்.

அமெரிக்க ராணுவத்தை ஈராக்கில் இருந்து வெளியேற்ற அந்த நாடு தீர்மானம் கொண்டு வந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஈராக்கின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தி உள்ளது. தற்போது ஈராக்கில் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவத்தினர் உள்ளனர்.

அவர்களை உடனடியாக வெளியேற்ற இயலாது. ஈராக் இந்த வி‌ஷயத்தில் தொடர்ந்து வலியுறுத்தினால் அந்த நாட்டுக்கு எதிராக நாங்கள் பொருளாதார தடை கொண்டு வர வேண்டி இருக்கும். அது ஈராக் நாட்டின் பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்க செய்யும்.

ஈரான் நாட்டவர்கள் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து அமெரிக்கர்களை கொல்ல நினைக்கிறார்கள். அதை ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். அவர்கள் நினைப்பது ஒரு போதும் நடக்காது.

நாங்கள் ஈராக்கில் சுமூக நிலை ஏற்பட எங்கள் ராணுவம் மூலம் நிறைய செலவு செய்து உள்ளோம். அந்த தொகையை திருப்பி தராத வரையில் நாங்கள் அந்த நாட்டில் இருந்து வெளியேற மாட்டோம்.

அமெரிக்க மக்களை துன்புறுத்தி கொல்ல நினைக்கிறார்கள். அப்படி நடந்தால் ஈரானில் உள்ள கலாசார, மத ரீதியிலான அனைத்து நிலைகளும் அழிக்கப்படும். அதற்கு நாங்கள் தயங்க மாட்டோம்.

நாங்கள் ஈரானுடன் போர் செய்யவில்லை. அமெரிக்க மக்கள் போரையும் விரும்பவில்லை. ஆனால் எங்கள் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தாக்குதல் நடத்துவதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news