Tamilசெய்திகள்

அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் – நேரடி விவாதத்தில் டிரம்ப்பை கோமாளி என்று கூறிய ஜோ பிடன்

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்படைந்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டிரம்பும் ஒருவரை ஒருவர் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இறுதிக்கட்ட பிரச்சாரமான வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் தொடங்கி உள்ளது.

ஓஹியோ மாநிலம் கிளீவ்லேண்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் நேரடி விவாதத்தில் டிரம்பும் -ஜோ பிடனும் அனல் தெறிக்கும் விவாதத்தில் ஈடுபட்டனர்.

மொத்தம் 90 நிமிடங்கள் விவாதத்திற்கு ஒதுக்கப்பட்டது. ஜோ பிடன் மற்றும் ஃபாக்ஸ் நியூஸின் நடுவர் கிறிஸ் வாலஸ் குறித்து ஜனாதிபதி டிரம்ப் பலமுறை பேசியதால், விவாதம் முதல் 20 நிமிடங்களில் குழப்பமாக மாறியது.

டிரம்ப், விவாதத்தின் தொடக்க பிரிவின் போது, பிடன் தனியார் காப்பீட்டை முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக குற்றம் சாட்டினார். பிடன் அதை மறுத்தார்.

உச்சநீதிமன்றம் மற்றும் வேட்பாளர்களின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த பிடனின் ஒவ்வொரு பதிலுக்கும், அதே போல் டிரம்பின் குற்றச்சாட்டுகளை பிடன் மறுத்ததற்கும் டிரம்ப் தொடர்ந்து குறுக்கிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது மிகப்பெரிய பெரிய பேரணிகளை டிரம்ப் ஏன் நடத்தினார்? என்று பிடன் கேட்டார். இதற்கு பதிலளித்த டிரம்ப், நான் சொல்வதை மக்கள் கேட்க விரும்புவதால் நடத்தியதாக பெருமையாக கூறினார்.

மார்ச் நடுப்பகுதியில் உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை உலகளாவிய தொற்றுநோயாக அறிவித்ததில் இருந்து, டிரம்ப் 21 பிரச்சார பேரணிகளை நடத்தியுள்ளார். அந்த பேரணிகள் – துல்சா, ஓக்லஹோமா, பீனிக்ஸ், அரிசோனா, மற்றும் நெவாடாவின் ஹென்டர்சன் ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆதரவாளர்கள் பெரும்பாலும் முககவசங்களை அணியல்லை, மேலும் சமூக விலகல் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இதுபற்றி பதில் அளித்த டிரம்ப் இதுவரை, எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.

ஜோ பிடன் தொடர்ந்து டிரம்பைத் தாக்கி பேசினார். அவரை “முற்றிலும் பொறுப்பற்றவர்” என்று அழைத்ததோடு, நோய் பரவலை தடுப்பதில் அக்கறை இல்லை, அங்குள்ள மக்கள் சுவாசிப்பதைப் பற்றி அவர் கவலைப்படவில்லை என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட டிரம்ப், “நீங்கள் கூட்டத்தைக் கூட்ட முடிந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள். ஆனால் உங்களால் முடியாது, அப்படி கூட்டத்தை கூட்ட யாராலும் முடியாது, என கூறினார்.

இதனால் தொலைக்காட்சி விவாதத்தில் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் பிடன் டிரம்பை ஒரு “கோமாளி” என்று அழைத்தார். “இந்த கோமாளியிடம் இருந்து எந்த வார்த்தையையும் பெறுவது கடினம் – இந்த நபரை மன்னியுங்கள்” என்று பிடன் கூறினார்.