அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது நிர்வாகத்தின் சில முக்கிய பொறுப்புகளுக்கு இந்திய வம்சாவளியினரை தேர்வு செய்தார். அந்த வகையில் வெள்ளை மாளிகையின் அதிகாரமிக்க பதவியான மேலாண்மை மற்றும் நிதி குழுவின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை நியமிக்க ஜோ பைடன் முடிவு செய்தார்.
இவரது நியமனத்துக்கு செனட் சபையின் ஒப்புதல் அவசியம் ஆகும். ஆனால் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் மேலாண்மை இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமிப்பதற்கு செனட் சபை எம்.பி. ஜோ மேன்ச்சின் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் நீரா தாண்டன் நியமனத்தில் சிக்கல் எழுந்தது.
இருப்பினும் வெள்ளை மாளிகையின் நிர்வாக குழுவில் நீரா தாண்டன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிபரின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மூத்த ஆலோசகராக நீரா தாண்டன் செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.