X

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – டொமினிக் திக் விலகல்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வருகிற 30-ந் தேதி முதல் செப்டம்பர் 12-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான ஆஸ்திரியாவின் டொமினிக் திம் விலகுவதாக நேற்று அறிவித்தார். அத்துடன் இந்த சீசனின் எஞ்சிய போட்டிகளிலும் விளையாடப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து 27 வயதான டொமினிக் திம் தனது டுவிட்டர் பதிவில், ‘அமெரிக்க ஓபன் மற்றும் இந்த ஆண்டுக்கான எஞ்சிய சீசனையும் நான் தவறவிடுகிறேன். அமெரிக்க ஓபன் பட்டத்தை தக்க வைக்க முடியாமல் போவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. கடந்த ஜூன் மாதம் எனது மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமடையவில்லை.

டாக்டர்களின் அறிவுறுத்தலின்படி போதிய மருத்துவ சிகிச்சை எடுத்து மீண்டும் பயிற்சியை தொடங்குகையில் வலி ஏற்பட்டதால் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெற்றேன். காயம் குணமடைய கூடுதல் காலம் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி இருப்பதால் அமெரிக்க ஓபன் போட்டியில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்தேன்’ என்று தெரிவித்துள்ளார்.

முழங்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) இந்த போட்டியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.