அமெரிக்க ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

ஆண்டுதோறும் 4 வகையான ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாமாக வருவது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் ஆகும். இந்த சீசனுக்கான 139-வது அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 8-ந்தேதி வரை நடக்கிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வழக்கம் போல் டாப்-3 வீரர்களான நடப்பு சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) ஆகியோர் இடையேத் தான் கடும் போட்டி இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

16 கிராண்ட்ஸ்லாம் வென்றவரான ஜோகோவிச் சூப்பர் பார்மில் உள்ளார். அண்மையில் விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில் பெடரரை 5 மணி நேரம் போராடி வீழ்த்தி வரலாறு படைத்தது நினைவிருக்கலாம். அவர் முதல் சுற்றில் ராபர்ட்டோ கார்பலெஸ் பானாவை (ஸ்பெயின்) சந்திக்கிறார். எல்லாம் சரியாக நகர்ந்தால் ஜோகோவிச் அரைஇறுதியில் பெடரரை சந்திக்க வேண்டி வரும்.

20 கிராண்ட்ஸ்லாம் வென்ற சாதனையின் சிகரமான ரோஜர் பெடரர் முதல் சுற்றில், தகுதி நிலை வீரரான இந்தியாவின் சுமித் நாகலுடன் மோதுகிறார். 38 வயதான பெடரர் அமெரிக்க ஓபனை 5 முறை ருசித்து இருந்தாலும் 2008-ம் ஆண்டுக்கு பிறகு இங்கு வாகை சூடவில்லை. அந்த நீண்ட கால ஏக்கத்தை தணிக்கும் வகையில் ஆடுவார் என்று நம்பலாம்.

ஒற்றையர் பிரிவில் இந்த தடவை இந்தியா சார்பில் 2 பேர் களம் காணுகிறார்கள். சுமித் நாகல், ஜாம்பவான் பெடரரை சந்திக்கிறார். மற்றொரு இந்திய வீரரான தமிழகத்தை சேர்ந்த பிரஜ்னேஸ் குணேஸ்வரன் முதல் சுற்றில் 5-ம் நிலை வீரரான ரஷியாவின் மெட்விடேவை இன்று எதிர்கொள்கிறார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனான ஒசாகா (ஜப்பான்), விம்பிள்டன் சாம்பியனான சிமோனா ஹாலெப் (ருமேனியா) ஆஷ்லி பார்டி (ஆஸ்திரேலியா), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), ஸ்லோனே ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா), பெட்ரோ கிவிடோவா (செக்குடியரசு) உள்ளிட்ட நட்சத்திர வீராங்கனைகள் வரிந்து கட்டி நிற்கிறார்கள்.

முன்னாள் சாம்பியன்களான அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும், ரஷியாவின் மரிய ஷரபோவாவும் முதல் சுற்றில் நேர் நேருக்கு நேர் சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்திருப்பது சுவாரஸ்யமான அம்சமாகும்.

இந்த போட்டிக்கான மொத்தம் பரிசுத்தொகை ரூ.410 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு தலா ரூ.27½ கோடியும், 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் வழங்கப்படும்.

இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news