X

அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை ஜோ பைடனுக்கு மாற்ற டிரம்ப் சம்மதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். இவர் 2021 ஜனவரி மாதம் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் முறைப்படி அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், தற்போதைய அதிபரான டொனால்டி டிரம்ப் ஜனநாயக கட்சி வேட்பாளர் பைடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதாக அவர் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார். மேலும், ஆட்சி அதிகாரத்தை பைடனுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையையும் டிரம்ப் தாமதப்படுத்தி வந்தார். இதனால், பல தரப்பில் இருந்தும் டிரம்ப் மீது விமர்சனங்கள் வந்தவண்ணம் இருந்தது.

இந்நிலையில், அமெரிக்க ஆட்சி அதிகாரத்தை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடனுக்கு முறையாக மாற்றம் செய்வதற்கும் தற்போதைய அதிபர் டிரம்ப் இன்று சம்மதம் தெரிவித்துள்ளார்.

அதிகார மாற்றத்தை மேற்கொள்ளும் ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு ஜோ பைடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தெரிவித்திருந்தது. டிரம்பால் நியமிக்க்கப்பட்ட இதன் நிர்வாகிகள் இதற்கு முன்பு வரை பைடனின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தாமல் இருந்து வந்தனர்.

அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை தற்போது ஏற்றுகொண்டுள்ள ஆட்சி மாற்ற அமைப்பு டிரம்ப்பிடமிருந்து அதிகார அமைப்புகளை பைடனுக்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில்
தற்போது இறங்கியுள்ளது. இந்த தகவலை ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பின் தலைவர் எமிலி மெர்பி உறுதிபடுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகளின் நிர்வாக பொறுப்புகளை பைடனிடம் ஒப்படைக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. அதிகார மாற்ற நடைமுறைகளை ஜெனரல் சர்வீசஸ் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு மேற்கொள்ள தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிரம்ப் தனது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு எமில் மெர்பி மற்றும் அவரது அமைப்பினர் அதிகார மாற்றத்திற்கான தேவையான முதல்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். எனது குழுவையும் அதிகார மாற்றத்திற்கான தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன்’ என்றார்.