அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கிய டிரம்ப்
அமெரிக்காவில் அதிபரின் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும். இதன்படி, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.
டிரம்பின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2-வது முறையாக தான் அதிபர் தேர்தலில் போட்டியிட இருப்பதாக சமீபத்தில் அறிவித்து இருந்தார்.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை டொனால்டு டிரம்ப் முறைப்படி தொடங்கினார். புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லாண்டோவில் டிரம்ப் பிரசாரத்தை தொடங்கினார். சுமார் 20 ஆயிரம் பேர் திரண்டிருந்த கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக வளர்ச்சி பெற செய்வோம் என்று வாக்குறுதி அளித்தார். மேலும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி, நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
தனது ஆட்சிக்காலத்தில் பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பும் அதிகரித்திருப்பதால், இரண்டாவது முறையாக மக்கள் தனக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.