அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, 46-வது அதிபராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற சமயத்தில் அமெரிக்காவில் கொரோனா உச்சத்தில் இருந்தது. இதையடுத்து ஜோ பைடன் தலைமையிலான அரசு, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மூலம் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது.
இதனிடையே அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரும் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஜோ பைடன் , கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுவர்களா என்ற கேள்வி எழுந்திருந்தது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், 2024-ம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதே சமயம் இதுகுறித்த உறுதியான முடிவு விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் வரலாற்றில் மிகவும் வயதான அமெரிக்க அதிபர் ஆவார். இதனிடையே குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார். எனவே டொனால்டு டிரம்ப்பை வீழ்த்த ஜோ பைடனை மீண்டும் அதிபர் வேட்பாளராக நிறுத்தவற்கான முயற்சியில் ஜனநாயக கட்சி ஆலோசித்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என செய்திகள் தெரிவிக்கின்றன.