இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். அத்துடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்றைய 10-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்நிலையில், காசா மீதான தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் செல்ல திட்டமிட்டுள்ளார் என வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பிளிங்கன் கூறுகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேலுக்கு பயணயம் மேற்கொள்ள உள்ளார். முக்கியமான தருணத்தில் அவர் அங்கு செல்கிறார். இஸ்ரேலுடனான அமெரிக்காவின் ஒற்றுமையை அதிபர் பைடன் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.
குறைந்தது 30 அமெரிக்கர்கள் உட்பட 1,400 க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் படுகொலை செய்துள்ளது. ஹமாஸ் மற்றும் பிற பயங்கரவாதிகளிடமிருந்து தனது மக்களைப் பாதுகாக்கவும் எதிர்காலத் தாக்குதல்களைத் தடுக்கவும் இஸ்ரேலுக்கு உரிமையும் கடமையும் உள்ளது என்பதை அதிபர் பைடன் மீண்டும் தெளிவுபடுத்துவார்.
இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இஸ்ரேலைத் தாக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசுக்கும் அல்லது அரசு சாராதவர்களுக்கும் அதிபர் பைடன் எங்கள் தெளிவான செய்தியை அடிக்கோடிட்டுக் காட்டுவார். ஹமாசால் பிடிக்கப்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்க அதிபர் எங்கள் இஸ்ரேலிய பங்காளிகளுடன் தொடர்ந்து நெருக்கமாக ஒருங்கிணைப்பார். அமெரிக்காவும் இஸ்ரேலும் பலதரப்பு அமைப்புகளின் மனிதாபிமான உதவிகளை காசாவில் உள்ள பொதுமக்களை அடைய உதவும் திட்டத்தை உருவாக்க ஒப்புக்கொண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.