அமெரிக்க அதிபரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிவசேனா கட்சி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 2 நாள் அரசு பயணமாக இந்தியா வருகிறார். வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் அவர், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் உள்ளிட்ட இடங்களுக்கு செல்வதால் டிரம்ப் பயணிக்கும் வழிகளில் சாலைகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடிசை பகுதிகளை மறைக்கும் வகையில் 7 அடி உயரத்திற்கு சுவரை மாநகராட்சி கட்டி வருகிறது. டிரம்ப் வருகைக்காக குஜராத் அரசு செய்து வரும் ஏற்பாடுகளை சிவசேனா கட்சி கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வருகைக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவது, இந்தியர்களின் அடிமை மனநிலையை காட்டுகிறது. டிரம்பின் இந்திய வருகை பேரரசரின் வருகை போல உள்ளது. சுதந்திரத்திற்கு முன் இங்கிலாந்து அரசர் அல்லது ராணி, இந்தியா போன்ற தங்களின் அடிமை நாடுகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தற்போது டிரம்ப் வருகைக்காக மக்கள் வரிப்பணத்தில் செய்யப்படும் இந்த ஏற்பாடுகள் அதை போன்றே உள்ளது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்தார். இந்திரா காந்தியின் இந்த முழக்கம் நீண்ட நாட்களுக்கு ஏளனம் செய்யப்பட்டது.

தற்போது, மோடியின் திட்டம் ‘வறுமையை மறைப்பது’ போல தெரிகிறது.

ஆமதாபாத்தில் இவ்வளவு நீளமான சுவரை எழுப்ப நிதி ஒதுக்கீடு ஏதும் செய்யப்பட்டதா? நாடு முழுவதும் இவ்வாறு சுவர் எழுப்ப அமெரிக்கா கடனுதவி எதுவும் வழங்கப்போகிறதா? டிரம்ப், ஆமதாபாத்தில் வெறும் 3 மணி நேரம் மட்டுமே இருக்க போவதாக தான் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மாநில அரசு கருவூலத்தில் இருந்து ரூ.100 கோடி செலவில் சுவர் கட்டப்படுகிறது. டிரம்பின் வருகையால் அன்னிய செலாவணி சந்தையில் இந்திய ரூபாயின் வீழ்ச்சியை நிறுத்தவோ அல்லது சுவருக்கு பின்னால் இருப்பவர்கள் (குடிசைப்பகுதி மக்கள்) மேம்படவோ போவதில்லை.

டிரம்ப் மிகவும் புத்திசாலி அல்லது உலகம் முழுவதையும் கவனித்துக் கொள்பவர் அல்ல. ஆனால் அவர் வலிமைமிக்க அமெரிக்காவின் பிரதிநிதி என்பதால் அவரை மரியாதையுடன் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools