அமெரிக்கா தலைமையில் நடைபெறும் சர்வதேச உச்சி மாநாடு – சீனா, ரஷ்யாவுக்கு அழைப்பு இல்லை
உலகின் இருபெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவுகிறது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இருநாடுகளின் உறவு மோசமடைந்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், சீன அதிபர் ஜின்பிங்கும் முதல் முறையாக காணொலி காட்சி வாயிலாக அண்மையில் சந்தித்து பேசினர். இதன் மூலம் இருநாடுகளின் உறவில் இணக்கமான சூழல் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதே போல் அமெரிக்க அரசு துறைகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல், உக்ரைனை ஆக்கிரமிக்கும் முயற்சி போன்ற விவகாரங்களில் ரஷியா மற்றும் அமெரிக்கா இடையே உரசல் போக்கு நீடித்து வருகிறது.
இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும், ரஷியா அதிபர் புதினும் விரைவில் நேரில் சந்தித்து பேச முடிவு செய்து, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஜனநாயகம் தொடர்பாக அமெரிக்கா தலைமையில் நடக்கும் சர்வதேச உச்சி மாநாட்டில் சீனா மற்றும் ரஷியாவுக்கு அழைப்பு விடுக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
‘ஜனநாயக உச்சி மாநாடு’ என்கிற பெயரில் அடுத்த மாதம் (டிசம்பர்) 9,10 ஆகிய தேதிகளில் காணொலி காட்சி வாயிலாக அமெரிக்கா இந்த மாநாட்டை நடத்துகிறது.
முதல் முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான் உள்பட 110 நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி ஜனாதிபதி ஜோ பைடனின் தலைமையில் நடக்கும் இந்த 2 நாள் மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு ஜனநாயக நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் வாய்ப்புகள் குறித்து இந்த உச்சிமாநாடு கவனம் செலுத்தும்.
மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் தலைவர்கள் தங்கள் நாட்டில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை வலுப்படுத்த தனிப்பட்ட மற்றும் கூட்டு அர்ப்பணிப்புகள், சீர்திருத்தங்கள் மற்றும் முன்முயற்சிகளை அறிவிக்க வாய்ப்புள்ளது.
இதனிடையே ஜனநாயகம் தொடர்பாக நடக்கும் இந்த முதல் உச்சி மாநாட்டில் பங்கேற்க சீனாவையும், ரஷியாவையும் அமெரிக்கா அழைக்கவில்லை. அந்த இரு நாடுகளிலும் ஜனநாயக அச்சுறுத்தல்கள் இருப்பதாக அமெரிக்க தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில், அந்த நாடுகளை அமெரிக்கா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இது ஒரு புறம் இருக்க மாநாட்டில் பங்கேற்க சீனாவை அழைக்காத அமெரிக்கா, தைவானுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தீவு நாடான தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வரும் நிலையில், அமெரிக்கா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஆதரித்து வருகிறது.
இந்த சூழலில் ஜனநாயக மாநாட்டில் சீனாவை புறக்கணித்து விட்டு, தைவானை அமெரிக்கா அழைத்திருப்பது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.