X

அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர் முடிவுக்கு வந்தது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரியையும், பிறநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் பலமடங்காக உயர்த்தி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால் சீனா- அமெரிக்கா இடையில் வரிவிதிப்பு வர்த்தகப் போர் மூண்டது. சீனாவும் அமெரிக்கா மீது ஏராளமான வரிகளை அறிவித்தது. இதற்கு பதிலடியாக சீனா மீது பல்வேறு பொருட்கள் மீது சுமார் 20 ஆயிரம் கோடி டாலர்கள் மதிப்பிலான வரிகளை டிரம்ப் சமீபத்தில் சுமத்தினார்.

இந்த வரிவிதிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், அர்ஜென்டினா நாட்டில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின்போது சீன அதிபர் க்சி ஜின்பிங் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான வரிவிதிப்பு கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாகவும், இருநாட்டு தலைவர்களும் வரிகளை தளர்த்த சம்மதம் தெரிவித்ததாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பின் மூலம் அமெரிக்கா, சீனா இடையிலான புதிய வரிவிதிப்பு வர்த்தகப் போர் இந்த மாதத்துடன் முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.