X

அமெரிக்காவுக்கு மீண்டும் எச்சரிக்கை விட தொடங்கிய வடகொரியா!

எதிர் எதிர் துருவங்களாக விளங்கிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என்ற உறுதிமொழியை டிரம்புக்கு கிம் ஜாங் அன் கொடுத்தார். அதன்படி வடகொரியா மேற்கொண்ட சில நடவடிக்கைகள் இரு நாட்டு உறவில் பதற்றத்தைத் தணிப்பதாக அமைந்தது.

எனினும் தங்கள் மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அப்படி செய்யாவிட்டால் மீண்டும் தாங்கள் அணு ஆயுத கொள்கைக்கு திரும்புவது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது வரும் என்றும் வடகொரியா எச்சரிகை விடுத்தது. மேலும் கடந்த மாதம் அதிநவீன அணு ஆயுத சோதனையை நடத்தி வடகொரியா அதிரவைத்தது.

இதற்கிடையே இரு நாட்டுத் தலைவர்களிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை டிரம்ப் உறுதி செய்தபோதும், பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு அவசரம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்

இந்த நிலையில், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னுக்கு மிக நெருக்கமானவர் மற்றும் ஒரு மந்திரி உள்பட வடகொரியாவை சேர்ந்த 3 பேர் மீது அமெரிக்கா திடீரென தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்க செனட் சபையில் வெளியுறவுத் துறை அமைச்சகம் தாக்கல் செய்த ஓர் அறிக்கையில், கிம் ஜாங் அன்னின் வலதுகரமாக செயல்படும் சோ ரியோங் ஹே, வடகொரிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜோங் கியோங் தாயிக் மற்றும் பிரசார அதிகாரி பாக் குவாங்ஹோ ஆகிய 3 பேரும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டது.

அதன் அடிப்படையில் அவர்கள் 3 பேர் மீதும் தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, அவர்களுக்கு சொந்தமாக அமெரிக்காவில் உள்ள சொத்துகளைப் பறிமுதல் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை வடகொரியாவுக்கு கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வடகொரியாவின் அரசு ஊடகமான கே.என்.சி. ஏ.வில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:

வடகொரியா உடனான உறவை மேம்படுத்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் பாராட்டுக்குரியவை. ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறையோ, இரு நாட்டு உறவை, கடந்த ஆண்டு இருந்ததை போல கடுஞ்சொற்களை பரிமாறிக்கொள்ளும் நிலைக்கு மீண்டும் கொண்டுவந்து நிறுத்துவது போல தலைகீழாக நிற்கிறது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கான பாதையை நிரந்தரமாக மூடிவிட செய்யும்.

வடகொரியா மீது அதிகபட்ச அழுத்தம் தர வேண்டும் என்கிற அமெரிக்காவின் எண்ணம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும். எனவே இரு நாட்டுத் தலைவர்கள் சந்திப்புக்கு பின் எதிர்பார்க்கப்பட்ட பரஸ்பர நம்பிக்கையை அளிக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.