X

அமெரிக்காவில் புயலில் சிக்கி 5 பேர் பலி

அமெரிக்காவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள பல்வேறு மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அலபாமா, மிசிசிபி, லூசியானா, டெக்சாஸ் ஆகிய மாநிலங்கள் இந்த புயலில் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன.

தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் மின் வினியோகம் இன்றி இருளில் மூழ்கின.

மிசிசிபி மாகாணத்தில் லிங்கன் கவுண்டி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் 63 வயதான ஆண் சிக்கினார். காயமடைந்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் புயல் காற்றுக்கு மத்தியில் வாகனங்கள் ஓட்டும்போது விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

அலபாமா மாகாணத்தில் பெல் நகரத்தில் 42 வயதான பெண் ஒருவர் வீட்டின் மீது மரம் விழுந்து பலி ஆனார். புயல் தாக்கி இதுவரை 5 பேர் பலியாகினர் என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

புயல் பாதித்த மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் புயல் நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.