X

அமெரிக்காவில் புத்தாண்டை கொண்டாடும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் ஒருவார பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். குடும்பத்துடன் சில நாட்கள் தங்கி ஓய்வு எடுக்கும் அவர் ஜனவரி முதல் வார இறுதியில் சென்னை திரும்புகிறார்.

ரஜினி மட்டும் முன்னதாக சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினர் இன்று இரவு அல்லது நாளை செல்ல இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக் காலம். நகரங்களில் அலங்கார விளக்குகளுடன் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது.

கிறிஸ்துமசுக்கு முந்தைய நாளான திங்கட்கிழமை மாலை 6 மணி வரையிலும் கடைகள் திறந்திருக்கும். பெரும்பாலான ஊர்களில் கடைசி நேர பரிசுப் பொருட்கள் வாங்ககூட்டம் அலைமோதும். நியூயார்க் போன்ற நகரங்களில் கடும் குளிர் என்ற போதிலும், சாலைகளிலும் கடைவீதிகளிலும் அலை அலையாக மக்கள் கூட்டம் இருக்கும்.

அமெரிக்காவுக்கு ஓய்வுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த் நியூயார்க்கில் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. அங்கு கடைவீதியில் ஸ்வெட்டருக்கு மேல் நீண்ட கோட் அணிந்து கையுறை, தலையில் குல்லா தொப்பியுடன் எளிதில் அடையாளம் தெரியாத வகையில் நடந்து சென்றுள்ளார்.

ஆனாலும் அடையாளம் கண்டுள்ள ரசிகர்கள் அவரை அணுகி படம் எடுத்துள்ளனர். மகிழ்ச்சியுடன் படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டுள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் புத்தாண்டு கொண்டாட்டம் புகழ்பெற்றது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். இந்தியர்களும் பெருவாரியாக கலந்து கொள்வது வழக்கமாகும்.

நியூயார்க்கை வலம் வரும் ரஜினிகாந்த் டைம்ஸ் கொயர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் மாறுவேடம் அணிந்து கலந்து கொள்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.