X

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 12 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் துப்பாக்கியால் சுடும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட வேண்டும் என அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் வணிக வளாகம் ஒன்றில் பொதுமக்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காயமடைந்தவர்களில் 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக
காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணிக வளாக உணவு அறையில் குடும்பத்தினருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும், மக்கள் அங்கிருந்து ஓடுவதை பார்த்ததாகவும் டேனியல்
ஜான்சன் என்பவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக துப்பாக்கி வைத்திருந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக கொலம்பியா காவல்துறைத் தலைவர் ஹோல்ப்ரூக் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தற்செயலாக நடைபெற்றதாக தெரியவில்லை என்றும், இதன் பின்னணியில் உள்ள காரணம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.