Tamilசெய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 13 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆடைகளில் ரத்தம் படிந்த நிலையில் கீழே விழுந்து கிடக்கும் பயணிகள் குறித்த புகைப்படங்களும் அவர்களுக்கு மற்றவர்கள் உதவுவதை காட்டும் புகைப்படங்களும் சமூக வளைதலங்களில்
பகிரப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் பலர் உயிரிழந்திருக்க கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் 13 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும், உயிரிழப்பு ஏதும் இல்லை என்றும் நியூயார்க் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கூட்டம் அதிகம் காணப்படும் நேரத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த
பகுதியில் வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விசாரணை காரணமாக, புரூக்ளினில் உள்ள 36வது தெரு மற்றும் 4வது அவென்யூ பகுதியை பொதுமக்கள் தவிர்க்குமாறு நியூயார்க் காவல் துறை, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

சந்தேகிக்கப்படும் வகையில் ஒரு நபர் மூகமூடி அணிந்த நிலையில் நடமாடியதாக அசோசியேட்டட் பிரஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இது தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடும் என
சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்து காவல்துறை அதிகாரிகள் உறுதிபடுத்தவில்லை.