அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் 16 ஆம் தேதி சென்னை திரும்புகிறார்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி அமெரிக்கா சென்றார்.
அவருக்கு அங்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விஜயகாந்த் மனைவி பிரேமலதா உடன் இருந்து கவனித்து வருகிறார்.
விஜயகாந்தும், பிரேமலதாவும் அமெரிக்காவில் இருப்பதால் கட்சி பணிகளை விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் ஆகியோர் கவனித்து வருகிறார்கள். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது.
கூட்டணிக்கான பேச்சு வார்த்தையில் சுதீஷ் ஈடுபட்டுள்ளார். பா.ஜனதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தே.மு.தி.க. எத்தனை தொகுதிகளில் போட்டியிடும்? எந்த தொகுதிகளில் நிற்கும் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
கட்சி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் விஜயகாந்த் ஆலோசனைப்படி நடப்பதாக சுதீஷ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் விஜயகாந்த் வருகிற 16-ந்தேதி சென்னை திரும்புகிறார்.
இதுகுறித்து தே.மு.தி.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 18-ந்தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்புகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.